Pages

Friday, 7 October 2016

கட்டுமான நிறைவுச் சான்றிதழ் வாங்கிவிட்டீர்களா?

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கப்போகிறீர்களா? வீட்டின் விலையில் தொடங்கி வில்லங்கம், பெயர் மாற்றம் உட்பட எல்லாச் சந்தேகங்களையும் கட்டுநரிடம் (பில்டர்) பேசித் தீர்த்துக் கொண்டீர்களா? கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) பற்றிப் பேசினீர்களா? அந்தச் சான்றிதழைக் கொடுப்பதாகக் கூறினாரா கட்டுநர்? ஒரு கட்டுநர் இந்தச் சான்றிதழை வாங்கி வைத்திருந்தால் கட்டுமானத்தில் விதிமீறல்கள் இல்லை என்று உறுதியாக நம்பலாம்.
கட்டுமான நிறைவுச் சான்றிதழ் என்றால் என்ன?
ஒரு கட்டுமானம் நடைபெறும்போது உள்ளாட்சி அமைப்பினர், சி.எம்.டி.ஏ., டி.டீ.சி.பி. அதிகாரிகள் கட்டுமானத்தை ஆய்வு செய்வார்கள். கட்டுமானம் நடைபெறும்போது மட்டுமல்லாமல், கட்டுமானம் முழுமையாக முடிந்த பிறகும் ஆய்வு செய்வார்கள். அதிகாரிகள் தாமாக வந்து ஆய்வு செய்ய மாட்டார்கள். கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) கேட்டு விண்ணப்பிக்கும்போது வந்து ஆய்வு செய்வார்கள். கட்டுமானத்துக்கான திட்டத்தை வைத்துகொண்டு திட்ட அனுமதியின் படி வீடு அல்லது அடுக்குமாடி வீடு கட்டப்பட்டிருக்கிறதா என்றும் அங்குலம் அங்குலமாக ஆராய்வார்கள். திட்ட அனுமதியின் படியும், விதிமீறல் இல்லாமலும் கட்டப்பட்டிருந்தால் அளிக்கும் தடையில்லாச் சான்றிதழ்தான் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) .
கம்ப்ளீஷன் சர்டிபிகேட்டின் அவசியம் என்ன?
புதிய வீட்டுக்குத் தேவையான பிற வசதிகளைச் செய்ய இந்த கம்ப்ளீஷன் சர்டிபிகேட் மிகவும் முக்கியம். அதாவது மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் இந்தக் கம்ப்ளீஷன் சர்டிபிகேட்டை சம்பந்தப்பட்ட துறையில் சமர்பிப்பது முக்கியம். எனவே வீடுகளை விற்கும் கட்டுநர் இந்த கம்ப்ளீஷன் சர்டிபிகேட்டை வீடு வாங்குபவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கட்டுநர் தரவில்லை என்றாலோ, தருவதாக இழுத்தடித்துக் கொண்டிருந்தாலோ வீடு கட்டுமானத்தில் விதிமீறல்கள் இருக்கலாம் என்று அர்த்தம் கொள்ளலாம். எந்த விதிமுறை மீறலும் இல்லை என்றால் கட்டுநர் உடனே இந்தச் சான்றிதழைக் கொடுத்துவிடுவார்.
எப்படிப் பெறுவது இந்தச் சான்றிதழை?
ஒருவேளை புதிதாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் எல்லோரும் வீட்டில் குடியேறிய பிறகும் கம்ப்ளீஷன் சர்டிபிகேட்டைக் கட்டுநர் தரவில்லை என்றால், வீடுகளில் குடியிருப்பவர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பைத் தொடங்கி உள்ளாட்சி அமைப்பிடம் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம். சாதாரணக் கட்டுமானமாக இருந்தால் அதற்கு இந்தச் சான்றிதழ் தேவையில்லை. புதிய இணைப்புகள் கொடுக்க வேண்டிய கட்டுமானம், அடுக்குமாடிக் கட்டுமானங்கள், உயர்ரக அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழிலகக் கட்டுமானங்கள், 15.25 மீட்டர் அளவுக்கு மேல் உள்ள கட்டுமானங்களுக்கு சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி-யிலிருந்து கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) பெற வேண்டும்.
சான்றிதழுக்கு என்ன விதிகள்?
உதாரணமாக எந்த ஒரு திட்டக் கட்டுமானமாக இருந்தாலும் அதன் எஃப்.எஸ்.ஐ. விகித அளவுகளின்படிதான் கட்டவேண்டும் என்பது விதி. அதாவது பிரதான சாலை 100 அடியாக இருந்தால் 20 அடி அல்லது 25 அடி வீட்டைச் சுற்றிச் செட்பே விட வேண்டும்.
60 அடியாக இருந்தால் 15 அடி செட்பேக்கும், 30 அடியாக இருந்தால் 10 அடி செட்பேக்கும் விட்டு வீடு கட்ட வேண்டும். தமிழகத்தில் எஃப்.எஸ்.ஐ. 1.5 விகிதத்தில்தான் கட்ட வேண்டும் என்பது வரையறை செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உயரம் மேலே செல்லச் செல்ல மாடிப்படி, போர்டிகோ போன்ற பகுதிகளைச் சில கட்டுநர்கள் விதிகளை மீறிக் கட்டிடத்திற்கு வெளியே கட்டிவிடுவார்கள்.
இதையெல்லாம் ஆய்வு செய்யும்போது அதிகாரிகள் அளந்து பார்ப்பார்கள். விதி மீறல் இல்லாமல் கட்டுமானத்தைக் கட்டினால் சான்றிதழ் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்க்காது. விதி மீறப்பட்டிருக்கும் நிலையில் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate)தர அதிகாரிகள் மறுத்துவிடுவார்கள். இதற்காக மட்டுமல்ல, அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது, அதன் உறுதித்தன்மைக்குச் சில விஷயங்கள் முக்கியம். கட்டிடப் பணி நடக்கும்போது, ஒவ்வொரு கட்டித்திலும், பிளான்படி கட்டப்படுகிறதா, கட்டிடம் உறுதித்தன்மையோடு இருக்கிறதா என சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அதிகாரிகள் பரிசோதித்துச் சான்றளிப்பார்கள். எனவேதான் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) முக்கியத்துவம் பெறுகிறது.
அதேசமயம் பெரிய குடியிருப்புகளுக்கு வெறும் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) மட்டுமே போதாது. அஸ்திவாரம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நிலையிலும் சான்றிதழ் வாங்குகிறார்களா எனப் பார்ப்பதும் நல்லது. வீடு என்பது மிகப் பெரிய கனவு; கஷ்டப்பட்டு உழைத்து, இ.எம்.ஐ. கட்டி வாங்கும் வீட்டில் விதிமீறலிருந்து; அதன் காரணமாகச் சிக்கல்கள் எழுந்தால் புது வீடு தந்த சந்தோஷம் துன்பத்தையும் தந்துவிடும். எனவே வீடு வாங்குபவர்கள் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) பற்றி கேள்வி எழுப்பி முறையாக வாங்கி வைத்துக்கொள்வதே நல்லது.

ிழ் ஹிந்து நிழ்

Thursday, 6 October 2016

அடுக்குமாடி குடியிருப்புகள்: நன்மைகள் என்னென்ன?

தான் வாழும் வீட்டை ஒருவர் எத்தனை தூரம் நேசிக்கிறார் என்பது அவர்தம் பேச்சிலேயே தெரிந்து கொள்ளலாம். சொந்த வீடோ வாடகை வீடோ தன் வீட்டைப் பற்றி பேசும்போது அவர்தம் பேச்சில் பெருமை கொப்பளிக்கும்.
இன்றைய காலகட்டத்தில் நகர்ப்பறங்களில் வீடு என்பது அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவே உள்ளன. மக்கள் தொகை மிகுந்த பெரு நகரங்களில் தனி வீடு என்பது எட்டாத கனவு என்பதை உறுதிபடக் கூறலாம். அடுக்குமாடிக் குடியிருப்புகளே மக்களின் வீட்டுத்தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மழைக்காலக் காளான்கள் போல நகரங்களெங்கும் தோன்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளே இதற்குச் சான்று.
நகரங்களில் வீட்டுமனை வாங்கி அதில் வீட்டைக் கட்டமைப்பது என்பது இயலாத காரியம். அனைத்து விதமான சமூகக் கட்டமைப்புகள் கொண்ட பகுதியில் வீட்டு மனைகள் காண்பது அரிதாகிவிட்டது. அதனால் சொந்த வீட்டுக் கனவில் மிதக்கும் அனைவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். மாத வருமானத்தில் வாழ்பவர்களும், தொழில் முனைவோரும் இதனை சிறந்த முதலீடுகளாகப் பார்கின்றனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பு தரும் பாதுகாப்பு
நவீன அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கையை விரும்பாதவர்கள் பலர் இருப்பினும் அது தரும் சவுகர்யங்களை குறைத்து மதிப்பிட முடியாது. வீட்டுப் பராமரிப்பு என்பது மிகப் பெரிய பணி. கணவன், மனைவி என்று இருவரும் வேலைக்குச் செல்லும் இந்தக் கால கட்டத்தில் சிறு, சிறு ரிப்பேர் வேலைகள் ஏற்ப்பட்டால் தனி வீடு என்றால் திண்டாட்டாம்தான். அடுக்குமாடிக் குடியிருப்பு எனில் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பணியாளர்கள் அதை நிவர்த்தி செய்து விடுகின்றனர். திடக்கழிவு, கழிவு நீர்அகற்றல், நீர் விநியோகம், சலவை போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் பொதுவாய் கிடைக்கின்றன.
உலகில் எவரும் சமரசம் செய்து கொள்ள விரும்பாதது பாதுகாப்பு. அது அடுக்குமாடிக் குடியிருப்பில் செக்யுரிட்டி மூலம் வழங்கப்படுகிறது. காவலாளிகள் பலர் நியமிக்கப்பட்டு ரோந்து வருகின்றனர். உள்ளே வரும் எவரும் பரிசோதிக்கப்பட்டே அனுப்பப்படுகின்றனர். அதனால் திருட்டு பயம் கிடையாது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுவாக தரைத்தளம் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சீரான படிக்கட்டுகளும் மற்றும் மின்தூக்கிகளும் அமைக்கப்படுகின்றன.
மின்தடை ஏற்படும் நேரங்களில் அவற்றை இயக்குவதற்காக ஜெனரேட்டர் வசதியும் செய்து தரப்படுகிறது. குழந்தைகள் விளையாடுவதற்கெனப் பூங்காவும், வயதில் மூத்தோர் நடை பயில நடைமேடையும் பொதுவாக அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் உள்ளன. இதர வசதிகளாக உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், மருந்தகம், குழந்தைகள் காப்பகம், பல்பொருள் அங்காடி போன்ற வசதிகளும் சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செய்து தரப்படுகின்றன. இப்படி மக்களுக்குத் தேவையான அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிச் சிறந்த தொழில்நுட்பத்தின் சின்னமாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் திகழ்கின்றன.
வெளிநாடுகளில் குறுகிய பரப்பளவு கொண்ட இடத்திலும் வீடுகளை அழகாகக் கட்டமைத்து அசத்துகிறார்கள். ஒரே அறையிலேயே அனைத்து வகையான தேவைகளையும் நிவர்த்தி செய்யும் அளவிற்கு இடவசதியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறிய இடத்திற்குள் எப்படி இத்தனை வசதிகளை உள்ளடக்கிக் கொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். ஒரே இடத்துக்குள் அனைத்துப் பொருட்களையும் இடம்பெறச் செய்தாலும் அறையை அலங்காரத்தால் அழகுபடுத்தி விடுகிறார்கள். அது போன்று திட்டமிட்டுச் செயல்பட்டால் சிறிய இடத்திலும் கனவு இல்லத்தைக் கச்சிதமாய்க் கட்டமைத்து விடலாம். இலட்சக்கணக்கில் செலவு செய்து வீடு வாங்கிய பின் அதன் உள்ளமைப்பில் கவனம் செலுத்தினால் வீடு சிறப்பாக அமையும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
அடுக்குமாடி வீடுகளின் உள்ளமைப்பில் சின்னச் சின்ன சங்கதிகளைச் சரிபார்த்தால் மிகச் சிறந்ததாக உங்கள் வீட்டை மாற்றிவிட முடியும். வரவேற்பறைக்கு அதிக இடத்தை ஒதுக்கினால் வீடு சிறியதாகத் தோன்றும். சாப்பிடும் அறை, சமையலறை போன்றவற்றை வரவேற்பறையின் ஒரு பகுதியாக வடிவமைக்கலாம். குளியலறை, கழிவறை போன்றவற்றைத் தனித்தனியே அமைத்தால் அதுவே அதிக இடத்தை ஆக்ரமித்து விடும். அதன் ஒரு அங்கமாக வாஷ்பேசின் அமைத்தால் இடம் மீதியாகும். இது போன்ற சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் சிறிய வீடுகூட சிறிது விசாலமாய்த் தெரியும்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் வாங்குவோர் முக்கியமாக நிலத்திற்கான ஆவணங்கள், கிரயப் பத்திரம், பட்டா, சிட்டா, அங்கீகாரச் சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ், சட்ட வல்லுநர் ஒப்புதல் சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். கட்டப்பட்ட இடத்துக்கான மண் பரிசோதனை, கான்கிரீட் பரிசோதனை சான்றிதழ் உள்ளனவா என்று ஆராய வேண்டும். அடுக்குமாடிக் குயிருப்பின் மாடித் தளங்கள் அமைக்க அனுமதிபெறப்பட்டுள்ளனவா என்பதை விசாரித்து அறிய வேண்டும். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பது மட்டும் முயக்கியமல்ல. அதன் தரம் உறுதியாக இருக்கிறதா என்பதும் முக்கியம்.
இவ்வாறு அவசர உலகில் நகரத்து சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க வாழ்வியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெரிதும் உதவுகின்றன. அவை கான்கிரீட் தோட்டம் என்றாலும் நம் மனமென்னும் வண்ணத்துப்ப்பூச்சி விரும்பி வாழும் உறைவிடம். வாழ்க்கையையே சங்கீதமாக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைவரும் விரும்பும் பூலோக சொர்க்கம் என்றால் மிகையல்ல.கவிப்பேர ரசு வைரமுத்துவின் வைர வரிகளில் கூறுவதென்றால்..
“இது மாடி வீடு…/ அட கோயில் கொஞ்சம் போரடித்தால்/தெய்வம் வந்து வாழும் வீடு...”
வெளிநாடுகளில் குறுகிய பரப்பளவு கொண்ட இடத்திலும் வீடுகளை அழகாகக் கட்டமைத்து அசத்துகிறார்கள். ஒரே அறையிலேயே அனைத்து வகையான தேவைகளையும் நிவர்த்தி செய்யும் அளவிற்கு இடவசதியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறிய இடத்திற்குள் எப்படி இத்தனை வசதிகளை உள்ளடக்கிக் கொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள்.

Sunday, 2 October 2016

அடுக்குமாடிக் குடியிருப்பின் அனுபவங்கள் என்னென்ன?

(நமது குடியிருப்பு சிறிய ஒன்றுதான். ஆனால் பெரிய குடியிருப்புகளில் உள்ள பிரச்சனைகளை தெரிந்து கொண்டால்தான் நமது குடியிருப்பின் அருமை நமக்கு புரியும் என்பதற்காக இங்கு இப்பதிவு)

என் உறவினர் ஒருவர் மிக அண்மையில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றுக்குக் குடிபெயர்ந்தார். தனி வீட்டில் குடியிருந்தவருக்கு, அடுக்குமாடிக் குடியிருப்பு அனுபவம் புதுமையாகத்தான் இருந்தது. இரண்டாம் நாளே மின் பொருட்களைப் பொருத்தவும், படம் மாட்டவும் சுவரில் துளை போட வேண்டியிருந்தது. \
அடுத்த தளக்காரர் உடனே வந்து, “சார் இந்த பிளாட்களில் இரவு ஏழு மணிக்கு மேல் இது போன்ற வேலைகள் மேற்கொள்ளக் கூடாது” என்று நிதானமாகச் சொன்னார். மேலே குறிப்பிட்டது போல, பல விதிகளும் நியதிகளும் எல்லா அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் இருக்கும். முக்கியமான சில அம்சங்கள்:
# ஒவ்வொரு தள வரிசைக்கும் தனி அமைப்பு இருக்கும். இது பதிவுசெய்யப்படாமல்கூட இருக்கலாம். பராமரிப்புக்கென மாதம் ரூபாய் ஆயிரத்திலிருந்து ஆயிரத்தி ஐநூறு வரை செலுத்த வேண்டிவரும். மின் தூக்கி பராமரிப்பு, காவலாளி ஊதியம், பிற சிறு செலவுகளுக்காக இத்தகைய தொகை வசூலிக்கப்படுகிறது.
# தள வரிசைக்குள் குடிபுகுந்துவிட்டால், உரிமையாளர், வாடகைதாரர் என்ற பாகுபாடு கிடையாது. அனைவரும் தளங்களில் வசிப்பவர்களே. குறைந்தபட்சம் 80 சதவிகிதம் அளவுக்கு பிளாட்களில் மக்கள் குடிவந்தவுடன்தான் காவலாளி நியமிக்கப்படுவார். தளத்தைக் காண்பித்து விற்பதோ, குடித்தனக்காரரை வைப்பதோ எல்லாம் ஒப்பந்தக்காரரின் பொறுப்பு,
# குடியிருப்புக்கென்று ஒரு சங்கம் ஏற்படுத்தப்படும் இதற்காக வருடா வருடம் கூட்டம் போட்டு, பொருளாளர், செயலாளர், தலைவர் அனைவரையும் தேர்ந்தெடுப்பது அவசியம். அது போன்ற கூட்டம் நிகழ்ந்தால்தான் பல சிக்கல்களைப் பேசி முடித்து, தீர்வு காண இயலும்.
# கீழ்த் தள வரிசையில் குடியிருப்பவர், மூன்றாம் மாடியிலிருப்பவர் எல்லாருக்குமே அவ்வப்போது சிக்கல்கள் எழும். மின் தூக்கி நின்றுவிட்டால், மாடியிலிருப்பவர் சிரமப்படுவார். கழிவு நீர்ப் பாதையில் கோளாறு ஏற்பட்டால், கீழ்த்தள வரிசைக்காரருக்குத்தான் பிரச்சினை மிகுதி.
# தனி வீடு என்றால் உங்கள் விருப்பம் போல் பாடலாம். சத்தம் போடலாம். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்பில் இதெல்லாம் முடியாது. ஏதாவது பஜனையோ அல்லது பாட்டு பாடினாலோ இயன்றவரை பக்கத்து வீட்டில் குடியிருப்பவருக்குத் தொந்தரவு தரக் கூடாது (அயல்நாட்டில் என்றால் இதுபோன்ற செயல்களுக்கு வழக்கே தொடுத்து விடுவார்கள்).
# மின்சாரப் பழுது வேலை என்றால், கூடுதல் கண்காணிப்பும் எச்சரிக்கையும் தேவை. டிவியைப் பதிப்பது, பழுதடைந்த குளிர்சாதனக் கருவியைச் சரி செய்வது போன்ற பணிகளுக்குக் கூடுமானவரை உங்களுக்கு நன்கு தெரிந்த, பழக்கப்பட்ட பணியாளரையே அழைத்துச் செய்யச் சொல்லுங்கள். ஏனென்றால் இரு குடியிருப்புகளுக்கான சுவர் பொதுவானது என்பதால் எச்சரிக்கை தேவை.
# என் உறவினர் குடியிருந்த தளத்தில், அந்தக் குடியிருப்பின் செயலாளர், “உங்கள் பிளாட் ஏஸியிலிருந்து நீர் ஒழுகுகிறது. சரி பண்ணுங்கள்” என்றார். உறவினர் மெக்கானிக்கை அழைத்துப் பார்க்க, அதில் ஏதும் பழுது இல்லை என்று தெரிந்தது. கடைசியில், குடியிருப்பில் இருக்கும் பிளம்பரை அழைத்துவந்து பார்த்ததில், நீர்க் கசிவுக்கு வேறு காரணம் இருப்பது கண்டுபிடித்து சரி செய்தார்கள். இதைக் குறிப்பிடக் காரணம், செயலாளர் மேம்போக்காகத் தெரிவிப்பதை எல்லாம் மிகச் சரி என ஏற்க வேண்டியதில்லை.
# குடியிருப்பு சங்கத்தின் விதிகளைச் சரிவரத் தெரிந்து கொள்ளுங்கள். வாசற்கதவைப் பூட்டுகிற நேரம், சில தென்னை மரங்கள் இருந்தால், பறிக்கப்படுகிற காய்களைப் பங்கு வைப்பது… இதுபோல் சின்ன விஷயங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வது நலம். (50, 100 பிளாட்கள் இருக்கிற இடம் என்றால், அங்குள்ள பிரச்சினையே தனி)
# கார் நிறுத்த இடத்தைச் சரியாகக் கவனித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தள வரிசை எண்ணுக்கும் தனி நிறுத்தம் ஒதுக்கப்பட்டிருக்கும். அது காலியாக இருந்தால்கூட, வேறு வாகனங்கள் நிறுத்தக் கூடாது.
# தளங்களில் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை வண்ணம் பூசுவார்கள். அதுபோல் நடந்தால், ஒத்துழைப்பு தர வேண்டும். குடித்தனக்காரர் எனில் உரிமையாளரிடம் அனுமதி கேட்டு சேர்ந்துகொள்ளலாம். (வெளியே மட்டும்தான்; உள்ளே வண்ணம் பூசுவது தனித் தனி நபரைப் பொறுத்தது.)
தனி வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு இரண்டிலும் சாதகமான, பாதகமான அம்சங்கள் உள்ளன. வெவ்வேறு இன, மதக் கலாச்சாரங்களில் பங்கு பெறும் வாய்ப்பு, பாதுகாப்பு போன்ற சில அம்சங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மட்டுமே சாத்தியம். ஓரளவு மனதைத் தளர்த்திக் கொண்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் உண்டாக்கிக்கொள்வது அவசியம்.